Skip to main content

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு: ஐ.பி.எல் போட்டிகளை இடமாற்றம் செய்ய ஆலோசனை

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
ipl



 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணாசாலையில் போராட்டம் நடத்தின.


பல்வேறு தமிழ் அமைப்புகள் அணி அணியாக வந்து போராட்டம் நடத்தியதால் ஐபிஎல் வீரர்கள் காலதாமதமாக மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டனர். இந்த போராட்டத்தினால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நான்காயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 
 

பலத்த சோதனைக்கு பிறதே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போனை தவிர வேறு எதையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டவில்லை. இருப்பினும் போட்டி நடந்தபோது காலணிகள் மைதானத்திற்குள் வீசப்பட்டன. இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

 

அடுத்த ஐபிஎல் போட்டியின்போது போராட்டம் மேலும் வீரியமடையும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கூறி வந்தன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து மத்திய உள்துறை செயலகம் ஆலோசித்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், மொத்தம் 7 போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்தது. நேற்று ஒரு போட்டி முடிந்த நிலையில் இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. இவைகளை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்