Supply of drinking water through trucks in Chennai; Notification of helpline numbers

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. குடிநீர் விநியோகத்தைப் பெற பொதுமக்கள் 1916 மற்றும் 044 - 45674567 ஆகிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்களுக்குத்தொடர்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொதுப்பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.