Skip to main content

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; முதல்வர் அதிரடி உத்தரவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Storm Advisory Meeting; Chief Minister's action order

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (01.12.2023) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கடந்த நவம்பர் 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

மழை, வெள்ளக் காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் வீழும் என்ற காரணத்தால், புயலின்போது விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 

Storm Advisory Meeting; Chief Minister's action order

 

கன மழையின்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்திட வேண்டும். மழைக் காலத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். இந்தத் துறைகள் எல்லாம் ஒருங்கிணைந்து அறிவுறுத்திட விரும்புகிறேன். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமென்று அங்கு தேங்கும் மழை நீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனடியாக அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னையில் பரவலாக மழை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
nn

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது.

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
cm stalin who started the excavation work

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டைகளில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தலம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர். 

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் கி.பி. 2 அல்லது 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லில், கோட்டைத் தலைவன் கணங்குமரன் ஆநிரைபூசலில் இறந்த தகவலை சொல்லும் நடுகல் என்பது தெரிய வந்தது. இதன் பிறகு பல்வேறு ஆய்வாளர்களின் வருகையை தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றம் மூலம் அகழாய்வுக்கான உத்தரவும் பெறப்பட்டது.

cm stalin who started the excavation work

தொடர்ந்து 2021 ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக 2022-2023 ம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குனராக கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், செங்கல், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடுசெங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

cm stalin who started the excavation work

இந்த நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சி பிரதிநிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படும் என்ற கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குழிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கிடைத்துள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

cm stalin who started the excavation work

தற்போது நீர்வாவி குளத்தின் தென்மேற்கு கரைப் பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் அகழாய்வு செய்ய பணிகள் தொடங்கியுள்ளது. இதே போல மேலும் சில இடங்களையும் ஆய்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அகழாய்வு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.