Skip to main content

அதி கனமழையின் பிடியில் தென் மாவட்டங்கள்; அணைகளின் நிலவரம்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Southern districts gripped by heavy rain; Status of dams

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை இரண்டாவது நாளாக மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் அதிக கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 740 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை 4 மணி அளவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தேங்கியுள்ள நீர் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஓய்ந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு குறைந்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கின் ஆக்ரோஷம் குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் இன்று தாமிரபரணியில் சுமார் 4000 கன அடி நீர் செல்கிறது.

வைகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக எச்சரிக்கை தொடர்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,150 கன அடியாக உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மூன்றாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி மொத்த உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69 அடியாக உயர்ந்ததால் இந்த மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணை முழு கொள்ளளவு எட்டியவுடன் உபரி நீர்  வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.