Skip to main content

உருவானது மூன்றாவது அணி!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

 

IJK SAMATHUVA MAKKAL KATCHI

 

கடந்த 24-ஆம் தேதி, ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் சென்றனர். சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "சசிகலாவின் உடல்நிலையை விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். சசிகலாவுடன் குடும்பம் போல் பழகியதால் நன்றி மறவாமல் சந்தித்தேன். 10 ஆண்டு காலமாக சசிகலாவை எனக்குத் தெரியும். கூடுதல் சீட் தரும் கட்சிகளுடன் கூட்டணி எனக் கூறவில்லை" எனத் தெரிவித்தார். 

 

அதேபோல, வருகிற 2021- சட்டசபைத் தேர்தலில், அதிக  தொகுதிகளில் களமிறங்க திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தனிச் சின்னத்தில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்தன. இந்தச் சூழலில்தான், மூன்றாவது அணி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

 

இன்று (26.02.2021) மாலை, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதியை தமிழகத் தேர்தல் நாளாக அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில், ஐ.ஜே.கே. (இந்திய ஜனநாயகக் கட்சி) -வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து, சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், தமிழகத்தை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்காகவும் இந்தக் கூட்டணி, மாற்றத்திற்கான முதன்மை அணியாகச் செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.