Skip to main content

எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்: டி.ஆர்.பாலு

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

dddd

 

எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்: டி.ஆர்.பாலு

20,000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கருவிகளை 57,000 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதா? முறைகேடான டெண்டரை ரத்து செய்து, அதற்குக் காரணமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தெரு விளக்குகளைக் கண்காணிக்கும் கருவி ஒன்று சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் போது அதே கருவியைச் சென்னை மாநகராட்சி 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது. 


தெருவில் உள்ள 40 முதல் 50 விளக்குகளைக் கண்காணிப்பதற்காக வழக்கம் போல் “தொழில்நுட்பங்கள்” அதிகம் உள்ள கருவி என்றும், டெண்டர் மூலமே வாங்கப்பட்டுள்ளது என்றும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொன்னாலும் - இதுமாதிரி கொள்முதல் ஊழல் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கீழ் தங்கு தடையின்றி அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது. 


இந்தக் கருவியை 20 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்குக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதுவும் 7 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொடுப்பதற்கு முன் வந்தும் - ரூ.57 ஆயிரத்திற்கு 1 ஆண்டு உத்தரவாதத்துடன் இது போன்ற கருவிகளைக் கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் பாழ்படுத்தியுள்ளார். 

அந்த அமைச்சரின் கீழ் உள்ள கோவை மாநகாட்சி இதே கருவியை 24 ஆயிரம் ரூபாய்க்குக் கொள்முதல் செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி ரூ.57 ஆயிரத்திற்கு வாங்கியிருக்கிறது. வேறு மாநகராட்சிகள் என்ன விலைக்கு வாங்கியிருக்கின்றன என்பது இன்னும் வெட்ட வெளிச்சத்திற்கு வரவில்லை. 

இந்தக் கண்காணிப்பு கருவி வாங்குவதில் மட்டும் 20 கோடி ரூபாய்க்குப் பதில் 40 கோடி ரூபாயைச் செலவழித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சரும், சென்னை மாநகராட்சி கொள்முதல் அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து அதிக விலையாகக் கொடுத்த 20 கோடியை சுருட்டியுள்ளார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. இந்தக் கருவி கொள்முதல் செய்யும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதியுதவித் திட்டம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியோ, ஜெர்மன் வங்கி வளர்ச்சி நிதியோ எதிலும் கொள்ளையடிப்பது என்ற ஒரே நோக்கில் உள்ளாட்சித்துறை அமைச்சர் செயல்பட்டு அரசுக் கருவூலத்தை - குறிப்பாக, மாநகராட்சிகளின் கருவூலத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

எஸ்.பி.வேலுமணியின் கீழ் உள்ளாட்சித்துறை தமிழக வரலாற்றில் முதன் முதலாக “கொள்ளையாட்சி” த்துறையாக மாறியிருக்கிறது. எஸ்.பி. வேலுமணி, நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்தும் - ஊழல் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கையிலிருந்தும் தப்பிக்க முடியாது.

ஆகவே 20 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய “தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவியை” 40 கோடி ரூபாய்க்குக் கொள்முதல் செய்யும் இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் - இதுவரை பெறப்பட்ட கருவிகளைத் திருப்பிக் கொடுத்து- இந்த கொள்முதலுக்குக் காரணமான அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும்  முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். தினமும் ஒரு ஊழல் என்று அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதை எஞ்சியிருக்கின்ற மூன்று நான்கு மாதங்களுக்காவது ஒத்தி வைக்குமாறு அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு - தானும் அந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்லாமியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை!  நிறைவேற்றிய அமைச்சர் வேலுமணி! 

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

S. P. Velumani

 

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கென தங்களுக்கு தனியாக கபர்ஸ்தான் நிலம் வழங்கவேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

சுமார் 20 ஆண்டுகளாக  வலியுறுத்திவந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி அளித்திருந்தார்.

 

இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, வேலுமணி உத்தரவிட்ட நிலையில், மதுக்கரையில் உள்ள முக்கிய சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் வேலுமணி, அதிகாரிகளுடன் சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். 

 

S. P. Velumani

 

அவர்களுடன் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். அந்த இடம் ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 

இதையொட்டி நடைபெற்ற  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, "20 ஆண்டுகளாக இந்த பகுதி இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பதை அறிவேன். இஸ்லாமியர்களுக்கு எப்படியாவது கபர்ஸ்தான் நிலம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தேன். 

 

S. P. Velumani

 

அதன்படியே தேர்வு செய்யப்பட்ட இடம் ஒன்றே முக்கால் ஏக்கர் உடையது. இந்த நிலம் முக்கிய சாலை வழியாக அமைந்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள். இதனையடுத்து கிறிஸ்தவர்களுக்கும் தனியாக மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கோவை மாவட்டத்துக்கு  50 ஆண்டுகளுக்கான  வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். கோவை சத்தி ரோடு அவிநாசி ரோடு திருச்சி ரோடு சாலைகளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கோவைக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்யப்படுகிறது. 

 

மறைந்த எங்கள் புரட்சித்தலைவவி அம்மா, எனக்கு கொடுத்த பதவியால் மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் என்னென்ன வளர்ச்சி தேவையோ அனைத்தும் கூறுங்கள் அனைத்தும் நாங்கள் செய்து தருகிறோம்" என்று உறுதியளித்துள்ளார் வேலுமணி.


 

 

Next Story

திருநங்கைகள் உணவகம்! அமைச்சர் வேலுமணி வாழ்த்து! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

ssss

 

கரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோவை திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த 10 பேர் இணைந்து கடந்த வாரம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 'கோவை ட்ரான்ஸ்' கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளனர்.  

 

தமிழகத்தில் முதன்முறையாக, முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த உணவகத்தை நிர்வகிக்கும் திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் முயற்சியைப் பாராட்டி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

அந்த பதிவில், "கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 திருநங்கைகள் இணைந்து கோவை ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ள செய்தியறிந்து மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த சீரிய முயற்சி வெற்றி பெற்று வாழ்வில் மென்மேலும் சிறக்க திருநங்கைகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்த பாராட்டை தொடர்ந்து, கோவை ட்ரான்ஸ் கிச்சன் உணவகத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழக பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசனும் தமது கட்சி நிர்வாகிகளுடன் சென்று இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்டு அவர்களின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் 'ட்ரான்ஸ் கிச்சன்' உணவக நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்