Skip to main content

'அழுத்தம் யாரால்?; சிபிஐ விசாரணை வேண்டும்'-பதிவாளருக்கு சென்ற புகார் !

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
 'Pressure by whom?; CBI should investigate'-

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 24 ஆம் தேதி விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர்.  இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதேநேரம் சவுக்கு சங்கருடைய தாயார் கொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் நீதிபதி பாலாஜி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். கோவை சிறையில் இருக்கக்கூடிய சவுக்கு சங்கரைப் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் உத்தரவு பிறப்பித்தனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அடுத்த கட்டமாக விசாரணை செய்வதற்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளார்கள். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்வதற்குச் சென்னை நீதிமன்றத்தினுடைய பொறுப்பு தலைமை நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது..

மேலும் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இந்த வழக்கை பொறுத்தவரை அதிகாரமிக்க நபர்கள் சிலர் அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரணைக்கு எடுக்க நேரிட்டேன்' என குறிப்பிட்டிருந்தார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் சவுக்கு சங்கர் வழக்கில் இறுதி விசாரணை அவசரமாக நடத்தப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டு இருப்பது நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.

இந்நிலையில் நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு 2 நபர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என  உயர்நீதிமன்ற பதிவாளரிடம்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு கொடுத்துள்ளார்.

இதேபோல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விரைவில் விசாரிக்கும் நோக்கத்திற்காகத் தான் சிபிசிஐடி'-ஆர்.எஸ்.பாரதி பேட்டி

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
'CBCID is aiming to investigate quickly' - RS Bharati interview

அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ''2016-ல் 570 கோடி ரூபாய் நடு ரோட்டில் கண்டெய்னர் லாரியில் பணத்தை பிடித்து  இதுவரையில் ஏறத்தாழ 8 வருடம் ஆகிறது. இதனை சிபிஐ தான் விசாரிக்கிறது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பொழுது சிபிஐ இன்வெஸ்டிகேஷன் கேட்கவில்லை. நீதிமன்றமே சிபிஐ விசாரணை கொடுத்தது.

டெல்லியில் நேரடியாக போய் சிபிஐ இடத்தில் கேட்டேன் ஆனால் எட்டு வருடம் ஆகிறது 570 கோடி ரூபாய் யாருடைய பணம் என்பதை இதுவரையில் சொல்லவும் இல்லை, அதற்கான எஃப்.ஐ.ஆரையும் சிபிஐ போடவில்லை. இப்படி பல வழக்குகள் தமிழ்நாட்டில் சிபிஐயில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே சிபிசிஐடி விசாரணை என்றால் துரிதமாக முடிக்க முடியும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் முதல்வர் கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை விசாரிப்பதற்காக சிபிசிஐடி விசாரணை மட்டுமல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியையும்  அமைத்துள்ளார்.

ஆனால் எடப்பாடி 'சிபிஐ... சிபிஐ..'. என்று திருப்பி திருப்பி கேட்கிறார். கேட்டால் சிபிசிஐடி காவல் துறை மீது நம்பிக்கையே இல்லை என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. நாங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி ஸ்டே வாங்கி விட்டார். பிறகு 2022-ல் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏற்கனவே விசாரித்தது சரியில்லை என்பதற்காக ஸ்டேட் போலீஸ் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரித்தார்கள்.

காவல்துறையின் சார்பாக விசாரித்து வந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. நான் தனிப்பட்ட முறையில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அதனுடைய அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்றது. காவல்துறையும் அதனை விசாரிக்கும் காரணத்தினால் ஒரே வழக்கிற்கு இரண்டு பேர் தேவையில்லை என்று நான் அந்த மனுவை திரும்ப பெறுகிறேன் என்று சொன்னேன். இது ஒன்றும் புதிதாக நடைபெறவில்லை. 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது டான்சி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தான் திமுக சார்பில் தொடர்ந்தேன். அதனுடைய வரலாறு உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்கை போட்டார் என்பதற்காக சண்முகசுந்தரம் 32 இடங்களில் வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு அரசு ஊழியர் செய்ய முடியாத செயலை செய்தால் 169 சட்டப்பிரிவின்படி தண்டிக்கலாம். அந்த வழக்கை நாங்கள் தான் முதல்முறை சைதாப்பேட்டை கோர்ட்டில் போட்டபோது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜெயலலிதாவிற்கு சம்மன்  அனுப்பினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் போய் அதற்கு ஸ்டே கேட்டார். நீதிபதி ஸ்டே கொடுக்க மறுத்துவிட்டார். நீங்கள் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டும் ஸ்டே கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்தார். அதனால் என்னென்ன கஷ்டங்களை நீதிபதி அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் நாட்டிற்கும் தெரியும்'' என்றார்.

Next Story

“சிபிஐ விசாரணை தேவையில்லை” - அமைச்சர் ரகுபதி!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
"No need for CBI investigation" - Minister Raghupathi!

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

"No need for CBI investigation" - Minister Raghupathi!

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது” எனத் தெரிவித்திருந்தார். 

"No need for CBI investigation" - Minister Raghupathi!

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிசியளித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்து. இதனால் இல்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து சட்டப்பேரவையை முடக்க முயற்சித்தார். பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய் ஆகும். அதிமுகவினர் வேண்டுமென்றே கேள்வி நேரத்தில் பிரச்சனை எழுப்புகின்றனர். கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர். அதே சமயம் அவையில் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்த போதும் அதிமுகவினர் அதனைக் கேட்கவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் போராடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் எத்தனைப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. கள்ளச்சாரயத்தில் எங்களுக்கு என்ன தேவை, என்ன அவசியம் இருக்கிறது? கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளது. நிச்சயமாக இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.