Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல். பா.ம.க வேட்பாளர் அறிவிப்பு!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
PMK candidate announcement on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. இவர் தி.மு.கவின் விவசாய அணி செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று பா.ஜ.க அறிவித்திருந்த நிலையில், பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. 

அதன்படி, பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, ‘விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ம.க சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார்’ எனத் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்  தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி பா.ம.க கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?’- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
T.V.K. leader Vijay's announcement What is the stand on the Vikravandi by-election?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக; ஆர்.எஸ். பாரதி பகிரங்க சவால்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
ADMK boycotts by elections RS Bharti Public Challenge

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆன் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களைப் பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர். 

ADMK boycotts by elections RS Bharti Public Challenge

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவை குறை கூறுகிறது. ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன். விக்ரவாண்டி இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால் தான் அதிமுக போட்டியிடவில்லை. 

ADMK boycotts by elections RS Bharti Public Challenge

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுக தான். 1992 இல்  பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியது. அப்போது 2000 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 2300 வாக்குகள் வரை அதிமுக போட்டது. ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்துகளில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுகளை அதிமுகவினர் போட்டனர். இந்த இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான். இந்தத் தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூற முடியுமா?.

எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வாக்களிக்க மாட்டார்களா?. வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் கலைஞர். எனவே வன்னியர் மக்களே கலைஞர் செய்த நன்மையே திமுகவிற்கு வெற்றியைத் தேடித் தரும்”எனத் தெரிவித்தார். இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.