Skip to main content

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Parliamentary budget session begins today

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.  அமளியில் ஈடுபட்ட 146 எம்.பி.க்கள் அந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்க நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தெருவில் நடக்கும் விவாதம் போல் நாடாளுமன்றம் செயல்படக் கூடாது” - சபாநாயகர் ஓம்.பிர்லா

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Speaker Om Birla said Parliament should not act like a street debate

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் மக்களவையின் சபாநாயகர் பதவிக்காகத் தேர்தல் நடைபெற்றதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார். அதனையடுத்து, 18வது மக்களவையின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில், ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் மற்றும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் ரஷீத் சிறையில் இருந்தபோது பஞ்சாபின் கதூர் சாஹிப் மற்றும் ஜே-கேவின் பாரமுல்லாவில் இருந்து சுயேட்சைகளாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதைக் காட்டுகிறது. 

மக்களவையில் பலமான எதிர்க்கட்சி என்பது கட்டமைக்கப்பட்ட முறையில் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும். இவை சவால்கள் அல்ல, ஒரு வாய்ப்பு. வலுவான எதிர்க்கட்சி தனது கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒப்பந்தங்களும், கருத்து வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்துக்களையும் அரசாங்கம் அறிந்து கொள்கிறது. பார்வைகள் அதிகமாக இருந்தால் நல்லது. ஆனால், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்திற்கும், தெருவில் நடக்கும் விவாதங்களுக்கும் நாட்டு மக்கள் சில வித்தியாசங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார். 

Next Story

ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
July 23 central budget presentation

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிப்பெற்று 3 வது முறையாக மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 ஆம் தேதி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 

தேசிய ஜனநாயக் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இது நாடாளுமன்ற பட்ஜெட்டில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் எனப் பலரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மேலும் விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.