MoU signed with 'Edipan' company

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில், வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப் நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தொழிற்கல்விக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் எடிபான் நிறுவனம்,இரயில் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான டால்கோ நிறுவனம், உயர் தொழில்நுட்ப உயிரியல் பொருள்களின் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் மேற்கொள்ளும் மேப்ட்ரீ நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உயர் நிர்வாகிகளைச் சந்தித்து, வளமான வாயுப்புகள் உள்ள தமிழ்நாட்டில் நிலவும் தொழில் முதலீட்டுக்கான சூழல்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (05.02.2024) அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து இச்சந்திப்பின் பலனாக எடிபான் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இச்சந்திப்பின் போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஷ் (Guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே.விஷ்ணு, முதலமைச்சரின் செயலாளர் பு. உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.