Minister C. Vijayabaskar Interview in Trichy

Advertisment

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துகள் கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,"ஸ்டாலின் அறிக்கை அளிக்கின்றேன் என்ற பெயரில் அநாகரிகமாக அரசியல் செய்கிறார்.கரோனா காலத்திலும் முதலமைச்சர் களத்தில் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.அமைச்சர்கள் மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.

உலகத்தில் இரண்டாம் அலை அடிக்கும் நேரத்திலும் தமிழ்நாட்டில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 10% பேர் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

Advertisment

அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு 40 சதவீதமாக இருந்த நுரையீரல் பாதிப்பு 90 சதமாக அதிகரித்ததால் அவர் உயிரிழந்தார்.அவருக்கு காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவர் உயிரிழந்தார்.அவரின் மரணத்தில் ஸ்டாலின் யாரை குற்றம் சாட்டுகிறார் என தெரியவில்லை.

அரசியல் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சரின் மரணத்தில் அரசியல் செய்கிறார். அநாகரிகமாக பேசுவது ஏற்புடையதல்ல. அன்பழகன், எஸ்.பி.பி, வசந்தகுமார் என யாராக இருந்தாலும் நேரிலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமும் விசாரித்தோம். சிகிச்சை குறித்து கேட்டறிந்தோம்.

துரைக்கண்ணு இறப்பில் மர்மம் இருக்கிறது என கூறுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் வார்த்தையை கவனமாக கையாள வேண்டும்.இறப்பில் மர்மம் இருக்கிறது என அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.இதை வைத்து அரசியல் செய்கிறார். விஷத்தை அள்ளி தெளிக்கிறார். துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துகள் கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடுக்கப்படும்.

Advertisment

மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு ஓரிரு நாளில் கலந்தாய்வு நேரில் நடைபெறும்.7.5 இட ஒதுக்கீடு பெற்று தந்த விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எந்த சம்மந்தமும் இல்லை.

மக்கள் தீபாவளியை, சுயக்கட்டுப்பாடுடன் கூடிய தீபாவளியாககொண்டாடினால் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தலாம்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினார்.பேட்டியின்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.