கடந்த 28 நாட்களாகபுதுச்சேரியின் மாஹே மற்றும் கர்நாடகாவின் குடகு ஆகிய பகுதியில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர்பலியாகியுள்ளனர். இந்தியாவைபொறுத்தவரை இந்தவைரஸ் காரணமாக 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேகமாகபரவி வரும் இந்த கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால், "கடந்த 28 நாட்களில் புதுச்சேரியின் மாஹே, மற்றும் கர்நாடகாவின் குடகு ஆகிய இடங்களில் புதிய கரோனா பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை. மேலும், 45 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களாக புதிய கரோனா பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை.
இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு விகிதம் 3.3 ஆக உள்ளது. மேலும் வயது வாரியாக உயிரிழந்தோர் விகிதத்தைப் பார்க்கையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 0 - 45 வயதுக்கு உட்பட்டோர் 14.4 சதவீதம், 45 - 60 வயதுக்கு உட்பட்டோர் 10.3 சதவீதம், 60 - 75 வயதுக்கு உட்பட்டோர் 33.1 சதவீதம், 75 வயதுக்கு மேற்பட்டோர் 42.2 சதவீதம்" எனத் தெரிவித்துள்ளார்.