Skip to main content

மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனுமதிச் சீட்டு முறையைக் கைவிட வேண்டும் என ஈஸ்வரன் கோரிக்கை!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

eswaran er


மாவட்ட எல்லைகளில் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். அனுமதிச் சீட்டு பெறுகின்ற முறை கைவிடப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-
 

மத்திய மாநில அரசுகள் மார்ச் 24- ஆம் தேதி உத்தரவிட்ட ஊரடங்கைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி வருகிறார்கள். அத்தியாவசியத் தேவைகள் தாண்டி பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பல்வேறு தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. மாவட்டத்திற்குள் மக்களுடைய நடமாட்டம் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாவட்ட எல்லைகளில் மக்கள் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்குப் பக்கத்து மாவட்டத்திற்குள் செல்ல வேண்டிய அவசியம் சாதாரண மக்களுக்கு இருக்கிறது.
 

1. மருத்துவத் தேவைகளுக்காகப் பக்கத்து மாவட்டங்களுக்குச் செல்வதற்கு எல்லைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.
 

2. இயங்குகின்ற தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியிருக்கிறது.
 

3. விவசாய கூலித் தொழிலாளர்கள் மாவட்ட எல்லை தாண்ட வேண்டியிருக்கிறது.
 

4. உற்பத்தியாகின்ற விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக பக்கத்து மாவட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
 

5.  அடுத்த மாவட்டத்தில் உள்ள தாய் தந்தையரை பார்ப்பதற்குப் பிள்ளைகள் செல்ல வேண்டியிருக்கிறது. பார்க்காமல் பல பெற்றோர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
 

6. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கும் அனுமதிச் சீட்டுகள் பெறுவதற்குக் காலதாமதமாகிறது.

 

 

இப்படிப் பல அத்தியாவசியத் தேவைகளுக்கு சாதாரண மக்கள் மாவட்ட எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல தொழிற்சாலைகள், கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகள் நிலவுவதால் 50 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் தடைபடுகிறது. எந்த மாவட்டமாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட வீடுகளை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு மற்ற பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர அனுமதிக்க வேண்டும். இந்த வகையில் மாவட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாக மாறி இருக்கிறது. திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மதுபானக் கடைகள் எங்கும் திறக்கப்படாததால் மாவட்ட எல்லைகளைத் தேவையில்லாமல் கடப்பவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் இன்றைய சூழ்நிலையில் மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும். அனுமதிச் சீட்டு பெறுகின்ற முறையும் கைவிடப்பட வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்