Double leaf symbol to be banned in two weeks?

அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் போடப்பட்ட மனுக்களையும், கட்சியின் உள்கட்சி பிரச்சனையை தேர்தல் ஆணையம் விசாரிக்கத்தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மனுவையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமியின் மனுவைத்தள்ளுபடி செய்ததுடன், ‘சின்னம் தொடர்பானவற்றைத்தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, அ.தி.மு.க விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்கிடையே, டெல்லியில் சில சீக்ரெட் மூவ் நடந்து கொண்டிருப்பதாக அ.தி.மு.க தலைமைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அ.தி.மு.க தலைவர்கள் அப்-செட் மூடில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விசாரித்தபோது, “அ.தி.மு.கவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை இணைக்க வேண்டும் என டெல்லி தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவர்களை இணைப்பதில்லை என்பதிலும், பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

அ.தி.மு.கவில் உள்ள சீனியர்கள் பலர் வலியுறுத்தியும் கூட, தான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள மறுத்து வருகிறார் எடப்பாடி.இதனால், அ.தி.மு.கவை ஒன்றுபடுத்தும் முயற்சியில் இருந்து விலகிவிட்டது பா.ஜ.க தலைமை. அ.தி.மு.கவை பலவீனப்படுத்துவது தான் பா.ஜ.கவின் திட்டமாக இருக்கிறது. அதாவது, வருகிற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே தான் போட்டி இருக்க வேண்டும்; அ.தி.மு.க சீனிலேயே இருக்கக் கூடாது என்பதுதான் அந்த திட்டம். தி.மு.க ஆட்சியை மீண்டும் பிடித்தாலும் பரவாயில்லை; தேர்தலில் போட்டிங்கிறது தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்குமிடையே தான் இருக்க வேண்டும்.

இதற்காக, கதை, திரைக்கதை, வசனங்கள் டெல்லியில் எழுதப்பட்டு வருகின்றன. அதன் முதல் கட்டமாக, அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். சின்னம் முடக்கப்பட்டால், அதை மீட்பதற்கே எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருப்பார். சின்னம் இல்லையெனில் அ.தி.மு.க மேலும் பலவீனமாகும். அ.தி.மு.க பலவீனமாகிவிட்டால் தி.மு.க VS பா.ஜ.க என்பதுதான் உருவாகும். இதைத்தான் டெல்லி எதிர்பார்க்கிறது. அதற்கான மூவ்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, அ.தி.மு.க விவகாரத்தை விசாரிக்கும் ஆலோசனை தேர்தல் ஆணையத்தில் நடக்கிறது. ஆலோசனையின் முடிவில், எடப்பாடிக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விஷயங்கள் நடக்கப்போகிறது. அதாவது, இன்னும் இரண்டு வாரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அறிவிப்பு வரப்போகிறது. இந்த தகவல்தான் எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்களுக்கு கிடைக்க, அவர்கள் ஷாக் ஆகியிருக்கிறார்கள்” என்கிறார்கள் விபரமறிந்த அ.தி.மு.க தரப்பினர்.