திமுக செயல்தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அப்போது திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தார். இதனைதொடர்ந்து, கலைஞர் அரங்கத்தில் ஸ்டாலின் கேக் வெட்டியும் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநிலதலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ‘சகோதரர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு திமுகவினர் தங்க மோதிரம் வழங்கினர்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி #HBDMKStalin என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. திமுகவின் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.