Skip to main content

பேரிடர் நேரத்திலும் இடையறாத 'கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன்! ‘நக்கீரன்’ அம்பலப்படுத்தியுள்ளது... மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை 

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
mk stalin

 

பேரிடர் நேரத்திலும் இடையறாத 'கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன் நடைபெறுவதாக, ‘நக்கீரன்’ இதழ் இதுபோன்றவற்றை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் தொடங்கி, உச்சநீதிமன்றம், மருத்துவர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் புறக்கணித்து, மூன்று நாளில் கரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொல்லி, இப்போது கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லிக் கைவிரிக்கும்  தமிழக ஆட்சியாளர்கள், மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாமல், பேரிடர்  நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சீனாவிலிருந்து ரேபிட் கிட் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் வரை சென்று அம்பலப்பட்ட நிலையில், அவற்றைத் திருப்பி அளிப்பதாகச் சொல்லிச் சமாளித்த ஆட்சியாளர்கள், இப்போது 'தெர்மல் ஸ்கேனர்' வாங்குவதில் ஊழல் செய்திருப்பது ஊடகங்கள் வாயிலாக ஊருக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது.

குதிரை களவு போன பிறகு லாயத்தைப் பூட்டி வைப்பதைப் போல, சென்னையில் கரோனா தொற்று அதிகமாகி, உயிர்ப்பலிகளும் கூடிக்கொண்டிருக்கிற அச்சம் மிகுந்த சூழலில், ஊரடங்குக்குள் ஊரடங்கு என நிலைமை கடுமையாக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொரு வீடாக சென்னை மாநகராட்சிக் களப்பணியாளர்கள் நேரில் சென்று உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்காக, இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் சீனாவிலிருந்து பிகே58பி என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை  சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்திருப்பதை ‘தினகரன்’  நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டு, அதிலுள்ள  ஊழல்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இந்த தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச (எம்.ஆர்.பி.) விலை ரூபாய் 9 ஆயிரத்து 175 ஆகும். மொத்தமாகக்  கொள்முதல் செய்த காரணத்தால் விலைக் குறைப்பு செய்து, ஒரு கருவியின் விலை 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவில் வாங்கியிருக்க முடியும் என மருத்துவப் பணி சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையைவிடக் குறைவான விலையில், 2 ஆயிரம்  ரூபாயில் தொடங்கி 5 ரூபாய் வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழகத்திலேயே  கிடைக்கின்றன. ஆன்லைன் மூலமாக 1500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய்வரை தரமான தெர்மல் ஸ்கேனர்களை பல மருத்துவமனைகளும், மருத்துவர்களும் வாங்கியுள்ளனர். மொத்தமாக வாங்கும்போது இதைவிடக் குறைவான விலையில் வாங்க முடியும் என்றும், சீனத் தயாரிப்பு தெர்மல் ஸ்கேனரை இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமென்ன என்றும் மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என ‘தினகரன்’ நாளேடு வெளியிட்டுள்ளது.

அதிக விலை கொடுத்து வாங்கிய தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் தரமோ படுமோசமாக இருக்கிறது என்றும், வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள் யார் யாரை சோதனை செய்கிறார்களோ அவர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையையும் இந்த  தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. மனித உடல் வெப்பநிலையின் சராசரி அளவை கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போலக் காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய்த் தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகிறார்கள்.

எத்தனை பேரிடம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது என்பதைக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு களப்பணியாளர்களுக்கு இருப்பதால்,  இதனை எப்படிப் பதிவேற்றுவது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். உயரதிகாரிகளோ, நீங்கள் பரிசோதிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆய்வு நேரங்களில் கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. அதனால் பெயரளவுக்கு,  தெர்மல் ஸ்கேனரை கையில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்யோசனையோ - தெளிவான திட்டமிடலோ - தொலைநோக்குப் பார்வையோ, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படைத்தன்மையோ இல்லாமல், முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான அ.தி.முக. அரசு செயல்படுவதைப் பல முறை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியபிறகும், அவற்றைத்  திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி, எதிர்க்கட்சியினர் ‘அரசியல்’ செய்வதாகச் சொல்லி, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் வேலைகளே தொடர்ந்து  நடைபெறுகின்றன.

வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்படுகிறோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகங்களிடம் சொல்கிறார். ஆனால், அவரது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மாஸ்க் ஒன்றின் விலை 15 ரூபாய் என ‘பில்’ போடப்பட்டுள்ளது. ஆயிரம், இரண்டாயிரம் என மொத்தமாக மாஸ்க் வாங்கும்போது, அடக்க விலை 3 ரூபாய் அளவில்தான் வரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். 500 ரூபாய் விலையுள்ள ஒரு லிட்டர் கிருமிநாசினியை 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக ‘நக்கீரன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கிருமி நாசினியைத் தெளிப்பதற்கான 8 ஆயிரம் விலையுள்ள பவர் ஸ்பிரேயரை,  22 ஆயிரத்து 500 ரூபாய் என பில்லில் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் அந்த ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியமான அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கும் தலா 1 என வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களுக்காக செலவிடப்பட்டிருப்பது 2 லட்சத்து 68 ஆயிரத்து 922 ரூபாய். அதாவது, ஒரு தெர்மல் ஸ்கேனர் விலை ரூ.7,909 என்றாகிறது. சென்னை மாநகராட்சி வாங்கியுள்ள தெர்மல் ஸ்கேனர்களைவிட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியத்தில்  வாங்கிய ஸ்கேனர்கள் விலை அதிகம் என்பதையே இது காட்டுகிறது.

இதுபற்றி விரிவாக எழுதியுள்ள ‘நக்கீரன்’ இதழ், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி மன்றத் தலைவர்கள், இந்த அநியாயக் கொள்முதலைக்  கண்டித்து, சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே காசோலை கொடுப்போம் என்று தெரிவித்திருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது. அநியாய கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதுடன், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்றும் நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்தக் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, மக்களின் உயிரோடு மரண விளையாட்டு ஆடிக்கொண்டிருப்பதை இனியாவது நிறுத்தி, இதுவரை நடந்தவை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
CM MK Stalin campaigned in Thadangam village of Dharmapuri 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி தடங்கம் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சத்திகளும் நாட்டு மக்களும் களம் கண்டுள்ள போர் இது. நாம் நடத்தும் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கான கட்டியம் கூறும் தேர்தல் இது. பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழிப்பதை தடுக்க தான் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சமூக நீதி பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. மக்களுக்கும் பா.ம.க.வினருக்கும் அதற்கான காரணம் நன்றாகவே தெரியும். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக தி.மு.க. போராடியது. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு” எனப் பேசினார். 

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.