Skip to main content

காடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்!!! அமைச்சர் வேலுமணி காரணமா???

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கோவையில் காடுகளை அழிக்கும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய கட்டுமான பணிகளை கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி எந்த ஒரு அனுமதியுமில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை மேற்கொள்வதால் அங்குள்ள வனவிலங்குகளும், காடுகளும் அழியும் சூழல் உருவாகியுள்ளது.
 

kovai


கோவை மாவட்டம், பேரூர் வட்டம், ஆலாந்துரை கிராமம், காளிமங்கலம் பகுதி, கோவை வனக்கோட்டம், போளுவாம் பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மாவட்ட சுற்றுசூழல் கமிட்டி மற்றும் மலையிட பாதுகாப்பு குழுவினால் (HACA) பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. யானைகள் மற்றும் சிறுத்தைகளின் பிரதான வாழ்விடமாகவும், நொய்யலாற்றின் நீராதார பகுதிகளாகவும் விளங்குகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இண்டஸ் பொறியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து கடந்த 2014ம் ஆண்டில் சீல் வைக்கப்பட்டது. 

சூழலியல் ரீதியாக மிக முக்கியமான பகுதியாக விளங்கும் இந்த பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வெளியில் தெரியாமல் ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை எந்த ஒரு அனுமதியுமில்லாமல் கட்டி வருவது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மூடப்பட்டது தெரிந்தும், எந்த ஒரு அனுமதியுமில்லாமல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சுமார் 600 வீடுகளை இங்கு வனத்தை ஒட்டி கட்டுவதன் மூலம்  யானைகள் வாழ்விடம் மற்றும் இடம்பெயர்தால் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதி வனமும் அழியும் சூழல் உருவாகியுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் வருகிறது. இது அமைச்சர் வேலுமணியால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் கிராம மக்களின் எதிர்ப்பையும்மீறி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே போளுவாம்பட்டி வனச்சரகத்தை ஒட்டித்தான் காருண்யா, சின்மயா, ஈசா யோகமையம், உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களுக்காக நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளன. தற்போது அவர்களை காப்பாற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்கின்றனர் கோவையை சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகள்.

 

-சிவா


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.