Skip to main content

வீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்! - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

vaalaal vettappadum cake

 

‘நம்மள கண்டா ஊரே பயப்படணும்..’ என்ற வாசகத்துடன், வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸில், வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார், விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சிவலிங்கம். அந்த வீடியோவில், பொது இடத்தில், கல்லூரி நண்பர்கள் புடைசூழ, வாளால் கேக் வெட்டி, அவரது பிறந்த நாளைக் கொண்டாடிய காட்சி மிரட்டலாக இருந்தது.   


சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த ரவுடி பினு தான், அரிவாளால் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தான். அப்போது, 75 ரவுடிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அடுத்து, மதுரவாயலில், சட்டக் கல்லூரி மாணவர், இதே பாணியில் பிறந்தநாள் கொண்டாடி, கைது செய்யப்பட்டார். ஆனாலும், சட்ட நடவடிக்கைக்கு அஞ்சாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற அட்டூழியங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. 

 

vaalaal vettappadum cake

 

சரி, விருதுநகர் விவகாரத்து வருவோம்! ‘மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா.. வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா..’ என்ற சினிமா பாடல் பின்னணியில் ஒலிக்க.. அந்த வீடியோ காட்சி பிறருக்கு சவால் விடும் வகையில் இருந்தது. சமூக வலைத்தளங்களில் இது வைரலாகப் பரவ, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து, சிவலிங்கம் உள்ளிட்ட 7 கல்லூரி மாணவர்களைக் கைது செய்து, அரிவாள் மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளனர். 


பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை சென்றும், பிறர் வாழ்த்தும் விதத்தில், மகிழ்ச்சியான சூழலில் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்ற சாதாரண விஷயத்தைக்கூட, கற்றுக் கொள்ளாத மாணவர்களாக, இத்தகையோர் இருப்பது கொடுமைதான்! 

 

இன்னொரு கொடுமையும் நடந்திருக்கிறது. விருதுநகர் விவேகானந்தர் தெருவில் மது அருந்திய இளைஞர்கள் அந்த வழியாகச் சென்ற சிறுவர்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்யும் சி.சி.டி.வி காட்சி ஊருக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்த, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார், சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.