Skip to main content

பவானிசாகர் அணையில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் பலி!!! மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்த பெற்றோர்..

Published on 21/06/2020 | Edited on 21/06/2020
BhavaniSagar Dam sathyamangalam government hospital

 

கரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டு, தற்போது ஐந்தாவது ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இருப்பினும் தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை, இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் உள்ளனர்.

 

கோவை அன்னூர் கணேசபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரனேஷ் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் யஸ்வந்த் (20), கதிரேசன் (20), ரகுராம் (20) சுரேஷ்ராஜ் (20) ஆகிய 5 பேரும் நண்பர்கள். வீட்டிலேயே இருந்த 5 பேரும் அவ்வப்போது சந்தித்துப் பேசுவது வழக்கம். இந்த நிலையில் இவர்கள் நேற்று காலை ஒன்றாக சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு செல்ல ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று காலை 3 மோட்டார் சைக்கிள்களில் 5 பேரும் பவானிசாகருக்கு சென்றுள்ளனர். மதியம் 12 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சித்தன்குட்டைக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அணையின் நீர்த்தேக்கத்தில் இறங்கி குளிக்கவேண்டும் என்று பிரனேஷ், யஸ்வந்த், கதிரேசன், ரகுராம் குளிச்சச் சென்றனர். இதில் சுரேஷ்ராஜ் மட்டும்தான் குளிக்க வரவில்லை என்று கரையிலேயே உட்கார்ந்து கொண்டார்.

 

4 பேரும் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 4 பேரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்கள். கைகளை ஆட்டியபடி அவர்கள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து சுரேஷ்ராஜ்-க்கு என்ன செய்வது என தெரியாமல், பதறிப்போய் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘ என்று அபாயக்குரல் எழுப்பினார். ஊரடங்கு காரணமாக அங்கு யாரும் இல்லாததால் 4 மாணவர்களையும் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்வது என தெரியாமல் சுரேஷ்ராஜ் அலறி துடித்தார்.

 

பின்னர் உடனே பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார் சுரேஷ்ராஜ். போலீசார் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சித்தன்குட்டைக்கு விரைந்து வந்தார்கள். போலீசார் அந்த பகுதி வாலிபர்கள் சிலரை உதவிக்கு வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கி தேடினார்கள். மாலை 3.30 மணி அளவில் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 மாணவர்களின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

நான்கு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அலறியபடி வந்த அவர்கள் தங்களின் மகன்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். மருத்துவமனைக்கு வந்தவர்கள் மற்றும் இந்த செய்தி அறிந்து சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பெற்றோர்கள் கதறி துடிப்பதை பார்த்து மருத்துவமனையில் இருந்தவர்களுக்கும் கண் கலங்கினர். 

 

சார்ந்த செய்திகள்