ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசின் முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு முன்னதாக, சசிகலா குடும்பத்தை எதிர்த்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்தன.
அந்த நிலையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் " என்று உத்தரவிட்டார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகர்ராவ். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops34.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஆனால் எடப்பாடி பழனிசாமி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். எடப்பாடி அரசுக்கு எதிராக இருந்து வந்த ஓ.பி.எஸ்., டெல்லியில் இருப்பவர்கள் உதவியுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தார். துணை முதலமைச்சராகவும் ஆனார்.
அந்த சூழலில், ' கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று சபாநாயகரிடம் மனு அளித்தது திமுக . ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார் சபாநாயகர். டிடிவி தினகரன் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்தபோது, இவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்பதுதான் திமுகவின் கேள்வியாக இருந்தது. தாங்கள் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கவில்லை என்பதால், திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது உயர்நீதிமன்றம், "சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா ? என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இந்த நீதிமன்றம் நேரடியாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது " என்று கூறி 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய திமுகவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து திமுக தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய சூழலில், நீண்ட மாதங்களாக வழக்கு விசாரணைக்கு வராமலே இருக்கிறது. மணிப்பூரில் 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தபோதும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாஜகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதனை எதிர்த்து , சிக்கிம் உயர்நீதிமன்றத்தில், காங்கிரஸ் முறையிட, காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயற்நீதிமன்றம். இதையடுத்து காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், " இந்த பிரச்சனையில் சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் மீண்டும் ஒரு முறை சபாநாயகரிடம் மனு அளியுங்கள். நான்கு வாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் " என்று கூறியதோடு, " சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் " என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தது.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மணிப்பூர் காங்கிரஸ் மனு மீது, மீண்டும் சபாநயாகரிடம் மனு அளிக்குமாறும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து, திமுக தரப்பும் , ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தங்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி கடந்த வாரம் புதிதாக மனு அளித்தது. இந்த நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிறது.
இந்த வழக்கு குறித்து டெல்லி வழக்கறிஞர்களிடம் பேசிய போது, "சட்டமன்றத்திற்குள் சபாநாயகரின் அதிகாரம் மட்டுமே செல்லும். சட்டமன்றத்திற்குள் அவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. சபாநாயகருக்கான அதிகாரம் குறித்து பல்வேறு வழக்குகள், பல்வேறு நீதிமன்றங்களில் முந்தைய காலங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு தீர்ப்புகளும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, தன்னிடம் அளிக்கப்பட்ட மனு குறித்து சபாநாயகர் ஒரு முடிவைத் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. சபாநாயகரின் முடிவு செல்லுமா? செல்லதா? என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியும். ஆனால், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான புகாரில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த வகையில், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சபாநாயகரை நோக்கி கேள்வி கேட்க முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.
மணிப்பூர் சட்டமன்ற விவகாரத்தில், மீண்டும் சபாநயாகரிடம் மனு அளிக்குமாறு கூறிய உச்சநீதிமன்றம், ' சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனில் மீண்டும் தங்களை நாடலாம் என கூறியிருப்பதால், அதுபோலவே, மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுங்கள் என திமுகவுக்கு அறிவுறுத்த வாய்ப்பிருக்கிறது " என்கின்றனர்.
இந்த சூழலில், இவ்வழக்கு பிப்ரவரி-4ல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தஹி, ‘’ இந்த வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. அப்படியிருக்க சபாநாயகருக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? சபாநாயகர் அளிக்கும் தீர்ப்பின் மீது நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர, அவர் முடிவெடுக்காத சூழலில் அவருக்கு எப்படி உத்தரவிட முடியும்? அதனால் இந்த வழக்கு அடிப்படை முகாந்திரமில்லாதது. குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என எந்த விதியும் கிடையாது. சபாநாயகரின் அதிகாரம் குறித்து வழக்கு அரசியல் சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டும் ‘’ என வாதிட்டார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ‘’ கொறடா உத்தரவை மீறிய 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2017-ல் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‘’ என வாதாடினார்.
இது குறித்து விசாரித்த நீதிபதிகள், ‘’ இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் காலதாமதம் தேவையில்லாதது. எப்போது அவர் நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தகுதி நீக்க கோரும் மனுவை நீண்ட காலம் சபாநாயகர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. எதற்காக இந்த கால தாமதம்? இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் சபாநாயகர் ஆராய்ந்தாரா? நடவடிக்கை எடுப்பதில் என்ன சிக்கல்? ‘’ என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதுடன், ‘’ இது குறித்து 15 நாட்களுக்குள் சட்டமன்ற பேரவை செயலர் பதில் அளிக்க வேண்டும்‘’ என சொல்லி, விசாரணையை 14-ந்தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்று நம்புவதாக கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில், நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையயும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
தகுதிநீக்கம் செய்யும் முடிவை சபாநாயகர் தீர்மானிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்ததால் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு ஆபத்து இல்லை என்றும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்து 3 ஆண்டுகளாகியும் சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாறா என்பது சந்தேகம் தான் என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)